வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டி மாணவர்கள் கலந்து கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த கோருதல் சார்பு - Request for guidance to school principals for students to participate in school and district level role play competitions related to early childhood education
அனுப்புநர்
முனைவர்.பெ.கோவிந்தபிரகாஷ்
முதல்வர்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், செட்டிக்கரை
தருமபுரி மாவட்டம்-636704
ந.க. எண். 486 / அ2 / 2025
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலகம் தருமபுரி.
: 14.10.2025
பொருள்
ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் --தேசிய மக்கள்தொகை கல்வித்திட்டம் வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டி மாணவர்கள் கலந்து கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த கோருதல் சார்பு -
பார்வை
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க. எண். 1662128/T3/2025 நாள். 09.10.2025
மேற்காண் பொருள் சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கிணங்க 2025 - 26 கல்வியாண்டில் வளரிளம் பருவக் கல்வி சார்ந்த பங்கேற்று நடித்தல் ( Roleplay) போட்டி 9 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு மட்டும் பள்ளி அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி அளவிலான போட்டிகள் 27.10.2025 அன்று இணைப்பில் குறிப்பிட்டுள்ள செயல்முறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி 03.11.2025 அன்று காலை 10.00 மணியளவில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி மாவட்டதில் நடைபெறவுள்ளது. எனவே பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியரை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு பொறுப்பாசிரியருடன் அனுப்பி வைக்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு
குழுவிற்கு 5 பேர் இருக்க வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ இருத்தல் கூடாது ஒருங்கிணைப்பாளர் : திரு பெ.மாது, முதுநிலை விரிவுரையாளர் (95002 44679)
இணைப்பு
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களது கடித நகல் நகல்
1. இயக்குநர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது
2. மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, தருமபுரி அவர்களுக்கு தக்க நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
3. மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை), தருமபுரி மாவட்டம் அவர்களுக்கு தக்க நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
4. உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, தருமபுரி (தனி கவனத்துடன் தக்க நடவடிக்கையின் பொருட்டு) அனுப்பப்படுகிறது.
5. சம்பந்தப்பட்ட பள்ளிக் தலைமையாசிரியர்கள் (உரிய அலுவலர் வழியாக)
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்,
சென்னை -06.
பொருள்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேசிய மக்கள் தொகைக் கல்வித் திட்டம் வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Roleplay) போட்டியினை நடத்துதல் சார்பாக.
பார்வை:
2025-26 ஆண்டிற்கான மக்கள் தொகை கல்வித் திட்ட ஆண்டுத் திட்டம்.
பார்வையில் காணும் புதுடெல்லி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவியுடன், 2025-26 கல்வியாண்டில், மக்கள் தொகைக் கல்வி சார்ந்த பங்கேற்று நடித்தல் (Roleplay) போட்டியினை இணைப்பில் கண்டுள்ளவாறு 19 மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், 9 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு. அளிக்கப்பட்டுள்ள தலைப்பு மற்றும் நிபந்தனைகளின்படி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி அளவில் நடத்தப்படும் போட்டியில் முதலிடம் பெறும் பள்ளி மாணவர் குழு மாவட்ட அளவிலும், அதில் முதலிடம் பெறும் பள்ளி மாணவர் குழு மாநில அளவிலும், மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளி மாணவர் குழுவிற்கு ஆங்கிலத்தில் பங்கேற்று நடித்தல் செயல்பாடுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு, அக்குழு NCERT-ல் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று நடித்திட வேண்டும்.
பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
பங்கேற்று நடித்தல் போட்டி அரசுப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்பட வேண்டும்.
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து தலைமை ஆசிரியரால் நியமிக்கப்பட்ட ஆசிரியரின் உதவியுடன் உரையாடல்களை தயார் செய்து, மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும்.
சூழ்நிலையில் கொடுக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, குறைக்கவோ கூடாது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் சிறப்பு உடைகள் அல்லது அலங்காரம் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்த்து, தங்கள் பள்ளிச் சீருடையிலேயே பங்கேற்று நடிக்க வேண்டும். பங்கேற்று நடித்தலின் போது மாணவர்கள் எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது.
பள்ளிகள் பங்கேற்று நடித்தல் போட்டியை அந்தந்தப் பள்ளிகளில் நடத்தி மிகச் சிறந்த ஓர் அணியினை மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள ஆசிரியரின் துணையுடன் தலைமை ஆசிரியர் அனுப்பி வைக்க வேண்டும். பங்கேற்று நடித்தல் மாணவர் குழுவில் பெண் குழந்தைகள் இருந்தால், கண்டிப்பாக ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆசிரியர் மாணவ, மாணவிகளை மாநில அளவிலான பங்கேற்று நடித்தல் போட்டிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்.
மாநில அளவிலான போட்டியினை நடத்திடும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தால் வெளியூரிலிருந்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வருகை புரியும் மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கும் வசதி (Refresh) ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயணப்படி வழங்கப்படமாட்டாது
திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி / தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கட்டணம் மாநில அளவிலான போட்டி நடைபெறும் மையத்தில் வழங்கப்படும்.
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
மாவட்ட/மாநில அளவிலான போட்டியை நடத்த செயல்முறைகளின் இணைப்பில் தெரிவித்துள்ளவாறு நடுவர்களை நியமித்து, மாவட்டஅளவிலான முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை சார்ந்த முதல்வர் தெரிவு செய்ய வேண்டும்.
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள தொகைக்கானப் புத்தகங்கள் மட்டுமே பரிசாக வழங்க வேண்டும். மேலும், இப்போட்டிக்கான செலவினம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அனுப்பப்பட உள்ள மக்கள் தொகைக் கல்வித் திட்ட நிதியிலிருந்து இணைப்பில் உள்ளவாறு மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாவட்ட அளவில் முதலிடம் பெறும் அணியின் பெயர்களை, மாநில அளவில் நடத்திடும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் மாநில அளவிலான போட்டி நடைபெறும் நாளுக்கு முன்னர் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களும் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்போட்டியில் பங்கேற்ற பள்ளிகள்/பங்கேற்பாளர்கள்/பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் தெரிவு செய்யப்பட்ட தலைப்புகள் ஆகியவற்றை, இந்நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட உள்ள Google Link-ல் நிரப்ப வேண்டும்.
இப்போட்டி மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படுவதால் அரசுப்பள்ளித் தலைமையாசிரியர்கள் இப்போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்குமாறும், இச்செயல்முறைகளை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், இப்போட்டியை சிறப்பாக நடத்திமுடித்த உடன், இப்போட்டிக்கான செலவின அசல் இரசீதுகளை தணிக்கைக்கு சமர்ப்பிக்கம் பொருட்டு பராமரிக்கவும், இச் செலவின முழு விவரம் (UC) மற்றும் மீதமுள்ள தொகையினை சென்னை-6, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குருக்கு அனுப்பி வைக்குமாறும் சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணைப்பு பங்கேற்று நடித்தல் (Roleplay) போட்டி நடத்திட கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் விவரங்கள்.
இயக்குநர்
பெறுநர்
சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் / சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள்.
நகல்
1. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6 அவர்களுக்கு மேல்நடவடிக்கைக்காகக் கனிவுடன் அனுப்பப்படுகிறது.
2.அரசுச் செயலர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை 09, அவர்களுக்கு தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது.

No comments:
Post a Comment