தமிழ்நாட்டின் கல்வித் தரம்: நிதர்சனமா, கற்பிதமா? கல்வித் துறையில் நடந்த மாற்றங்களை அறிந்துகொள்வோம் - TNTeachersTrends

Latest

Friday, October 31, 2025

தமிழ்நாட்டின் கல்வித் தரம்: நிதர்சனமா, கற்பிதமா? கல்வித் துறையில் நடந்த மாற்றங்களை அறிந்துகொள்வோம்

தமிழ்நாட்டின் கல்வித் தரம்: நிதர்சனமா, கற்பிதமா? கல்வித் துறையில் நடந்த மாற்றங்களை அறிந்துகொள்வோம் - Tamil Nadu's education quality: Reality or fiction? Let's learn about the changes that have taken place in the education sector

அண்மையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்றொரு விழாவை நடத்தியது அரசுக் கல்வி நிலையங்களில் இருந்து, சிறப்பாகக் கல்வி பயின்று. உயர்வை அடைந்த மாணவர்களின் வெற்றியைக் கொண்டாடும் விழா இதைத் தொடர்ந்து பொது வெளியில், தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் எல்லாம் இல்லை; பள்ளி மாணவர்களின் கல்வி வெளிப்பாடுகள், பல மாநிலங்களைவிட மோசமாக உள்ளன என்னும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்கள், ஒரு தொண்டு நிறுவனம் தயாரிக்கும் அசர் (ASER) என்னும் ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.



அண்மையில், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசின் திட்டக் குழுவின் உதவியோடு மாநிலம் தழுவிய ஓர் ஆய்வை மேற்கொண்டது. அது 3, 5, 8ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர் களில், 60% மாணவர்களிடம் கல்வி வெளிப் பாடுகளை அறிவியல்பூர்வமாகக் கணித்த ஆய்வு இந்த ஆய்வில், 3, 5, 8 வகுப்புகளில் கல்வி வெளிப்பாடு தேசியச் சராசரியைவிட மேலாக உள்ளது என்றும், அரசின் 'எண்ணும் எழுத்தும்', 'இல்லம் நேடிக் கல்வி' ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் நன்றாக இருக் கின்றன என்றும் தெரியவந்துள்ளது. அரசாங் கத்தின் ஆய்வு சொல்வதுபோல, தமிழ்நாடு உண்மையிலேயே கல்வியில் சிறந்த மாநிலம் தானா ?

தனியார் பள்ளிகளின் பெருக்கம்

தமிழ்நாட்டின் கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன என்பதை அறிந்துகொண் டால், அரசாங்கத்தினுடைய இந்தக் கொண்டாட் டத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும். 1980கள் வரை தமிழ்நாட்டில், பள்ளிக்கல்வி என்பது பெரும்பாலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சிப் பள்ளிகள் போன்றவை வழியாகத்தான் பெரும்பாலும் நடந்துவந்தது. அன்று தனியார் பள்ளிகள் மிகக் குறைவு. அரசுப் பள்ளிகளில், செல்வந்தர்களின் வாரிசுகளும், ஏழைகளின் வாரிசுகளும் ஒரே வகுப்பில் படித்தார்கள். சமூகத்தின் கவனமும் பள்ளிகளின் மீது இருந்தது.

அதன் பின்னர், பள்ளிகளின் தேவை அதிகரிக்க, அரசாங்கம் தனியார் பள்ளிகளை அனுமதிக்க முடிவெடுத்தது. தனியார் பள்ளிகள் பெருகின. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படத் தொடங்கியது. சுகாதாரத் துறை நிர்வாக மேம்பாட்டின் காரணமாகப் பிறப்பு சதவீதம் குறையத் தொடங்கியது.

இத்தகைய சூழலில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்திப் படிக்கும் குடும்பங் களின் எண்ணிக்கை உயர்ந்தது. சமூகத்தின் பொதுவெளிகளில், ஊடகங்களில், அரசுப் பதவிகளில் நீக்கமற நிறைந்திருக்கும் உயர் சாதி/வர்க்க மக்களின் கண்காணிப்பில் இருந்தவரை அரசுப் பள்ளிகளின் செயல் பாடுகள் நன்றாக இருந்தன. ஆனால், அரசுப் பள்ளிகளில் அவர்களின் பிள்ளைகள் பயிலாமல் போனவுடன், சமூகத்தின் அரசியல் சொல்லாடல் களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த உயர் சாதி/வர்க்கத்தின் பார்வையில் மாற்றம் வரத் தொடங் கியது. அரசுப் பள்ளிகள் என்றாலே மோசமான கல்வியும், நடத்தையும்தான் என்னும் ஒரு பார்வை எழத் தொடங்கியது. அதில் ஓரளவு உண்மையும் உண்டு. சமூகத்தின் பார்வை யில், கண்காணிப்பில் இருக்கும் வரையில்தான் எந்த ஒரு பொதுநிறுவனமும் ஓரளவு நல்ல முறையில் செயல்படும்.

சமூக நீதியின் அவசியம்

கடந்த 40 ஆண்டுகளில், அரசுப் பள்ளி களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை யும். சதவீதமும் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து, இன்று அரசுப் பள்ளிகளில், சமூகப் பொருளாதார அடுக்கில் கீழ்மட்டத்தில் இருக்கும் குழந்தைகளே பயில வருகிறார்கள். பெரும்பான்மை மாணவர்கள் தலித் சாதியினர், மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர், சிறுபான்மை இனத்தவர் போன்றோர்தான்.

மிகவும் ஏழ்மையான குடும்பங்களில், கல்வி பயில உரிய சூழலும், வசதிகளும் இருப்பதில்லை. இதை உணர்ந்து, மாணவர் களைப் பரிவுடன் (empathy) அணுகும் ஆசிரியர்கள் குறைவு. இத்தகைய சூழல் களில், மிக எளிதாக மாணவர்களின் நடத்தை, அவர்கள் தலைமுடி வளர்க்கும் முறை போன்ற வற்றை முன்வைத்து, அவர்களை மோசமான ஆளுமை வட்டத்துக்குள் அடைத்துவிடும் சொல்லாடல்கள் உருவாகின்றன. சில மாணவர் களின் நடத்தைகளும் அதை நியாயப்படுத்தும் வகையில் உள்ளன.

ஆனால், இன்னும் 50% மாணவர்கள் தனியார் பள்ளிக்குச் செல்லும் வசதி பெறாதவர்கள் என்னும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது. இங்குதான் சமூக நீதி மிக உண்மையாகச் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்தச் சமூகத்தளத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 14-17 ஆண்டுகள் வரையில் பள்ளி/கல்லூரி என்னும் அறிவியல்பூர்வமான, முற்போக்கான சூழலில் இருப்பது முக்கியம். 3, 5, 8 ஆம் வகுப்புகளில் தோல்வியுறும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர் ஆகிறார்கள். பெண் குழந்தையெனில், இளம் வயதில் திருமணம் நடந்துவிடுகிறது.

குழந்தைகள் பள்ளிச் சூழலில் இருந்துஎக்காரணம் கொண்டும் வெளியேறிவிடக் கூடாது என்பதே நம் பள்ளிக் கல்வியின் முதன்மை லட்சியமாக இருக்கிறது. அதற்காகக் கல்வியின் தரம் குறைவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அரசின் கடமை

அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கல்விச் சூழலும், அதில் தரமான கல்வியும் எந்த அரசுக்குமே பெரும் சவால் தான். இந்தச் சூழலில்தான், கடந்த சில ஆண்டு களாக, காலைச் சிற்றுண்டி, 'நான் முதல்வன்', 'புதுமைப் பெண்', 'அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி நிதியுதவி' போன்ற திட்டங்கள் வழியே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

'நான் முதல்வன்' திட்டம் வழியாக, ஏறக்குறைய 700 அரசுப் பள்ளி மாணவர்கள், ஐஐடி, என்.ஐ.டி, தேசிய சட்டக் கல்லூரிகள் போன்ற கடுமையான நுழைவுத் தேர்வுகள் கொண்ட உயர்தர தேசிய நிறுவனங்களில் நுழைந்திருக் கிறார்கள்; முழுக் கல்விச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. அரசுப் பள்ளிகளுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசு ஏற்றுக்கொள் கிறது. 100க்கும் அதிகமான தலித் மாணவர்கள், அயல்நாடுகளில் உயர் கல்வி நிலையங்களில் கல்வி பெற, முழுக் கட்டண அரசு உதவியோடு படிக்கச் சென்றிருக்கிறார்கள். இவையெல்லாம் இன்றுவரை அரசுப் பள்ளிகளில், கல்லூரிகளில் நடந்திராத முன்னேற்றங்கள்.

இச்சாதனைகளைத்தான் அரசு கொண்டாடு கிறது. அரசுப் பள்ளிகள் என்றால், கல்வித் தரம் மோசமாக இருக்குமோ என ஏழைப் பெற்றோர்களிடம் இருக்கும் தயக்கத்தை நீக்குவதே இதன் இலக்கு. நன்றாகப் படித்தால், அரசுப் பள்ளி மாணவர்களும் உலகளாவிய உயர்கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியும் என்னும் சாத்தியமே உண்மையான சமூக நீதி. 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் அரசியல் முழக்கம், ஓர் உயர்ந்த லட்சியம். அதை நோக்கித் தமிழ்ச் சமூகத்தைச் செலுத்தும் முயற்சியின் ஒரு படிதான், இந்தக் கொண்டாட்டம்

2 comments:

  1. 50 ஆண்டு காலம் முழுமையான கல்வியில் வளர்ந்த நிலையை அடையாமல் போக யார் காரணம் . இன்றும் இலவம் வழங்கும் நிலையுள்ளதே

    ReplyDelete
    Replies
    1. திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போட்டால் இலவசம் மட்டும் தான் கிடைக்கும்

      Delete