உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவில் குழப்பம்: ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது என்ன? Confusion over Assistant Professor recruitment results: What does the Teachers Recruitment Board say?
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 25-ம் தேதி வெளியானது.
ஜூன் 25-ம் தேதி வெளியான உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக தேர்வர்கள் புகார் எழுப்பிய நிலையில், அது குறித்து உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2,708 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தம் 48 பாடங்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வை 42,064 பேர் எழுதினர். இத்தேர்வு மொத்தம் 230 மதிப்பெண்களுக்கு இரண்டு தாள்கள் கொண்டு நடத்தப்பட்டது. முதல் தாள் 150 மதிப்பெண்களுக்கு (கட்டாய தமிழ் தவிர்த்து) கொள்குறி வகையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் தாள் 50 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்கும் வகையில் நடைபெற்றது. மேலும், அனுபவம் மற்றும் நேர்காணலுக்கு தலா 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
முதல் தாளுக்கான உத்தேச விடைக்குறிப்பு கடந்த ஜனவரி 5-ம் தேதி வெளியாகி 13 வரை ஆட்சேபனை பெறப்பட்டது. தேர்வர்கள் ஆட்சேபனை எழுப்பிய கேள்விகள் பாட வல்லுநர்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தேர்தலுக்கு முன்பு 5 பாடங்களுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், இதர பாடங்களுக்கு ஜூன் 25-ம் தேதி முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில், டிஆர்பி வெளியிட்ட முடிவுகளில் குளறுபடி இருப்பதாக தேர்வர்கள் புகார் எழுப்பியுள்ளனர். விரிவாக விடையளிக்கும் இரண்டாம் தாளில் ஏராளமான தேர்வர்களுக்கு மிக குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். முதல் தாளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பலருக்கும், இரண்டாம் தாளில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
முதல் தாளுக்கு உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு இருக்கும் நிலையில், இரண்டாம் தாளுக்கு அதுபோன்ற வெளிப்படைத்தன்மை இல்லை என தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
*இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தியிடம் கேட்டப்போது, ”உயர்கல்வித்துறை அரசாணையின்படி விரிவாக விடை எழுதுதல் பிரிவிற்கான வினாத்தாளுக்கு விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் முதலில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் நியமனம் செய்யப்பட்ட 2 பேராசிரியர்கள் திருத்தம் செய்தனர். அவர்கள் அளித்த மதிப்பெண்களில் 5 மதிப்பெண்கள் வித்தியாசம் வந்திருந்தால், மூன்றாவதாக ஒரு பேராசிரியர் கொண்டு திருத்தம் செய்யப்பட்டது.
*ஆனால், தற்போது விரிவாக விடை எழுதும் பிரிவிற்கான மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்திய பின்னர் தெளிவான விளக்கம் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.*

No comments:
Post a Comment