ஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்களில் பிழைகள் இருக்கலாமா? - சு.மூர்த்தி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
ஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்களில் பிழைகள் இருக்கலாமா?
ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள் இரண்டு) கேட்கப்பட்டுள்ள குழப்பமான; தவறான வினாக்கள் இரண்டை மட்டும் தற்போது சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பள்ளி சமுதாய உறவை மேம்படுத்துவது எது? என்ற கேள்விக்கு கீழ்க்கண்ட 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
A. ஆசிரியர்கள் கூட்டங்கள்
B. பள்ளி மேலாண்மை குழுக்கள்
C. மாணவர் நல குழுக்கள்
D. பெற்றோர் ஆசிரியர் அமைப்புகள் இதில், A. ஆசிரியர்கள் கூட்டங்கள் என்று கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு ஆங்கிலத்தில் "Staff Meetings" என்று இடம் பெற்றுள்ளது. இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பதல்ல. "ஆசிரியர்கள் கூட்டங்கள்" என்பதும் பிழையானது. "ஆசிரியர் கூட்டங்கள்" என்று இருக்க வேண்டும்.
வினாவில் உள்ள "பள்ளி சமுதாய உறவை" என்ற தொடர், "பள்ளி - சமுதாய உறவை" என்று இடம் பெற்றிருக்க வேண்டும். (ஆங்கிலத்தில், "school-community relationship" என்று சரியாக இடம் பெற்றுள்ளது)
தமிழ்ச் சொற்றொடரில் நிறுத்தற்குறிகளைச் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
B. பள்ளி மேலாண்மை குழுக்கள்
C. மாணவர் நல குழுக்கள்
விடைகளாகக் கொடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட இரண்டு தொடர்களிலும் இலக்கணப் பிழைகள் உள்ளன.
பள்ளி மேலாண்மைக் குழுக்கள், மாணவர் நலக் குழுக்கள் என்று அமைய வேண்டும். (இது போன்ற இலக்கணப் பிழைகள் வினாத்தாளில் பல இடங்களில் உள்ளன)
மேலும், கொடுக்கப்பட்டுள்ள 4 விடைகளில் ஒரு விடை மட்டுமே சரியானதாக (தர்க்க அடிப்படையில்) தேர்வு செய்ய முடியாது.
மற்றொரு கேள்வியிலும் பிழைகள் உள்ளன.
"கீழ்க்கண்ட வாக்கியத்தில் மகல்வாரி முறைக்கு தகுந்த சரியான கூற்றை தேர்ந்தெடு" என்ற வினாவிற்கு, (இந்தத் தொடரிலும் இலக்கணப் பிழைகள் உள்ளன)
"a. கிராமத் தலைவர் அரசுக்கும் கிராம மக்களுக்குமிடையே இடைத்தரகராக செயல்பட்டார்" என்று தமிழ் வினாப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில வினாப் பகுதியில்,
"a. The Lambarder acted as intermediaries between the Government and The villagers"
என்று கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில்
"Lambarder" என்பது தவறானது. "Lambardar" என்று இருக்க வேண்டும். பாடநூலில் "Lambardar" என்று சரியாக இடம் பெற்றுள்ளது.
தமிழ்ப் பாடப் பகுதியில்
கீழ்க்கண்ட வினாவும் இடம் பெற்றுள்ளது.
எட்டுப் பொருளில் வரும் இடைச்சொல்
A. ஆ
B. மட்டும்
C. தான்
D. ஓ
தமிழ்ப் பாடத்தில் கேட்கப்படும் இதுபோன்ற 30 வினாக்களுக்கு
தமிழ்ப் பாட ஆசிரியர் மட்டுமல்லாமல், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்களும் விடையளிக்க வேண்டும்.
ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கிய 150 கேள்விகள் இடம் பெறுகின்றன.
தொடக்கக்கல்வி நிலையில் கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியர், தான் கற்பிக்கும் பாடம் மட்டுமல்லாமல் பிற பாடப்பகுதிகளிலும் (குறிப்பாக மொழிபாடங்களிலும்) போதுமான பாட அறிவைப் பெற்றிருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
(தமிழ்ப் பாட ஆசிரியருக்கும் ஆங்கிலப் பாட ஆசிரியருக்கும் அவரவர் கற்பிக்கும் பாடங்களில் 30 வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. சமூக அறிவியல் பாடத்தில் 60 வினாக்கள் கேட்கப்படுகின்றன.
இது சரியானதா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.)
ஆசிரியர் தகுதித் தேர்வை 30 ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களும் எழுதிய ஆக வேண்டும் என்று நாட்டின் தலைமை நீதி அதிகார அமைப்பு கட்டளையிட்டுள்ளது. (கல்வி அதிகார அமைப்பு கட்டளையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து இந்தக் கட்டளை கல்வித்துறையால் நிறைவேற்றப்படுகிறது. உரிய கல்வித் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆற்றியுள்ள கல்விக் கடமைகளை நாட்டிற்குச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றம் கவனிக்கத் தவறவிட்டது. கல்வி அமைச்சகமும் நீதி அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து விட்டது.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவது நாடு முழுவதும் இன்று பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடம்பெறும் வினாக்கள் எந்தத் தவறுகளும் இல்லாமல் அமைய வேண்டும்.
நன்றாக விடை தெரிந்த வினாக்களுக்கும் தவறாக விடைகளைக் குறியீடு செய்யும் வகையிலும் நோக்கத்திலும் சில வினாக்கள் இடம் பெற்றுள்ளன. போட்டித் தேர்வுகளில் இப்படியான செயற்கையான தவறுகளை உருவாக்க வைக்கலாம். ஆனால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் இப்படியான நோக்கம் இருக்கக் கூடாது.
தற்போது நடைபெற்றுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாளில் இடம்பெற்றுள்ள தவறுகள் (பிழைகள்) அனைத்தும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் தகுதியுடைய வல்லுநர் குழுவால் கண்டறியப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றுள்ள பிழையுள்ள அனைத்து வினாக்களுக்கும் உரிய மதிப்பெண்கள் தேர்வெழுதிய அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
*அறம் செய்ய விரும்பும் அரசையே ஆசிரியர் சமூகம் எதிர்பார்க்கிறது* .
சு.மூர்த்தி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
No comments:
Post a Comment