Breaking

Wednesday, June 17, 2026

சிறப்பு டெட் தேர்வை ஒரு மாத காலம் ஒத்திவைக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

சிறப்பு டெட் தேர்வை ஒரு மாத காலம் ஒத்திவைக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை Teachers' association requests one-month postponement of special TET exam.



தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் சிறப்பு தகுதித் தேர்வு (Special TET) எழுதவுள்ள நிலையில், ஜூலை 5-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வை ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சருக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில மகளிர் செயலாளர் சு.மு.கிருஷ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த மார்ச் மாதம் முதல் ஆசிரியர்கள் பொதுத்தேர்வு பணிகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள், மதிப்பீட்டுப் பணிகள், பள்ளி சார்ந்த நிர்வாகப் பணிகள் மற்றும் பல்வேறு அரசுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக சிறப்பு தகுதித் தேர்வுக்குத் தேவையான அளவில் தயாராகுவதற்கு போதுமான நேரம் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை.


மேலும், தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் மாணவர் சேர்க்கை, பாடப்புத்தக விநியோகம், வகுப்பறை ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளிலும் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூலை 5-ஆம் தேதி தேர்வை எதிர்கொள்வதில் பல ஆசிரியர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

எனவே, ஆசிரியர்களின் நலன் மற்றும் அவர்களின் தொழில்முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, ஜூலை 5-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு தகுதித் தேர்வை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்து உரிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

இதன் மூலம் ஆசிரியர்கள் முழுமையான தயாரிப்புடன் தேர்வை எழுதுவதற்கும், அதிகமானோர் தேர்ச்சி பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment