Breaking

Monday, July 27, 2026

40 ஆண்டுகளுக்குப் பின் நெகிழ்ச்சி! ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து அசத்திய அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்!


40 ஆண்டுகளுக்குப் பின் நெகிழ்ச்சி! ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து அசத்திய அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்!

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1984-87 ஆம் கல்வி ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடித் தங்களுடைய ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து நன்றி செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


40 வருட நினைவுகளைப் பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்


கடந்த 1984-87 காலகட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் படித்த தெலுங்கு வழி முன்னாள் மாணவ, மாணவியர் பள்ளிப் படிப்பை முடித்து பிரிந்து சென்றனர். அவர்களில் பலர் சுயதொழில் செய்தும், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிகளில் உயர்பதவிகள் வகித்தும், வெளிநாடுகளில் பணியாற்றியும் தற்போது பணிநிறைவு (ஓய்வு) பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து ஆசி பெற வேண்டும் என விரும்பிய முன்னாள் மாணவர்கள் 40 பேர், கடந்த 3 மாதங்களாக முயற்சி செய்து பல்வேறு இடங்களில் வசிக்கும் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.


ஆசிரியர்களுக்கு பாத பூஜை & நினைவு பரிசுகள்


கனகம்மாசத்திரம் அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில், வெளிநாடு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் 60 வயதைக் கடந்த முன்னாள் மாணவ, மாணவியர் திரளாகப் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் தங்களுக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களை அறிமுகப்படுத்திய மாணவர்கள், அவர்களுக்குச் சிறப்புச் செய்து பாத பூஜை நடத்தி ஆசி பெற்றனர். மேலும், ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளையும் வழங்கி நெகிழ்ந்தனர்.

பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் உதவி


தங்கள் நினைவுகளைப் போற்றும் வகையில், தாம் படித்த பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் அடுக்குமாடி வகுப்பறைகளுக்கான இரும்பு கிரில்களை (Iron Grills) முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.


மேலும், இனிவரும் ஆண்டுகளில் கனகம்மாசத்திரம் அரசுப் பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.


வகுப்பறை நினைவுகளுடன் ஒரு நாள்


காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்தத் திருவிழா போன்ற நிகழ்வில், பழைய மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் பழைய வகுப்பறை நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியடைந்ததுடன், நினைவாகக் குழு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment