5 ரூபாய்க்கு டீ, ஸ்நாக்ஸா? அரசு பள்ளி மேலாண்மை குழு கூட்ட நிதியால் கல்வித்துறையில் சர்ச்சை!
தமிழக அரசுப் பள்ளிகளில் 2026-2028 ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டத்திற்கு ரூ. 5 மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதால் தலைமை ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ள சர்ச்சை குறித்த விரிவான செய்தி.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2026 முதல் 2028ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC) மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மறுசீரமைப்பு குறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கூட்டத்திற்காக அரசு ஒதுக்கியுள்ள நிதித் தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், இது தலைமை ஆசிரியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பள்ளி வளர்ச்சிக்காக பெற்றோர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் எஸ்.எம்.சி. எனப்படும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 24 உறுப்பினர்களைக் கொண்டு இந்தக் குழு அமைப்புச் செயல்படுகிறது.
தற்பொழுது தி.மு.க. ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட இக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால், புதிய குழுக்களைத் தேர்ந்தெடுக்கும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இக்கூட்டங்களை ஒருங்கிணைக்க ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் மூலமாக பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு குறித்து தலைமை ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், "இக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் பெற்றோர்களுக்கு டீ மற்றும் ஸ்நாக்ஸ் வழங்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், கூட்டத்தில் பங்கேற்கும் ஒரு பெற்றோருக்கு வெறும் 5 ரூபாய் மட்டுமே டீ மற்றும் ஸ்நாக்ஸ்க்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் துண்டுப் பிரசுரத்திற்கு (Notice) 1 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போதைய விலைவாசி உயர்வில் 5 ரூபாய்க்கு ஒரு டீயோ அல்லது ஸ்நாக்ஸோ வாங்குவது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் செலவை மறைமுகமாகத் தலைமை ஆசிரியர்களின் தலையில்தான் அதிகாரிகள் கட்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, விழிப்புணர்வு கூட்டங்களைச் சிறப்பாக நடத்தத் தகுந்த மற்றும் அவசியமான நிதியை கல்வித்துறை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

No comments:
Post a Comment