TN TET News: சட்டமன்றத் தீர்மானத்தால் பயன் இல்லையா? ஆசிரியர்களின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன?
'டெட்' விலக்கு தீர்மானத்தை விட அரசு கொள்கை முடிவு அவசியம்: ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) விவகாரத்தில், விலக்கு கேட்டு வெறும் தீர்மானம் நிறைவேற்றுவதை விட, தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என ஆசிரியர்கள் தீவிரமாக எதிர்பார்க்கின்றனர்.
தேசிய அளவில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
இடையில் ஆசிரியர்களுக்காக ஜூலை 4, 5-ல் சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சட்டமன்றத் தீர்மானமும் ஆசிரியர் சங்கங்களின் விமரிசனமும்:
இந்நிலையில், 'டெட்' தேர்வில் இருந்து தமிழ் தகுதிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 24-ல் நடந்த மானியக் கோரிக்கையில் அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது ஆசிரியர்களிடையே ஒருபுறம் ஆதரவையும், மறுபுறம் பலத்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'டெட்' தேர்வு விலக்கு தீர்மானத்தால் மட்டும் எந்தவொரு தீர்வும் ஏற்பட்டுவிடாது; இது ஆசிரியர்களை ஏமாற்றும் வேலை மட்டுமே என்று தெரிவித்தனர்.
'டெட்' என்பது உச்சநீதிமன்றத்தின் உறுதியான தீர்ப்பு என்பதால், நீட் தேர்வுக்கும் முன்பு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைப் போல இதிலும் தொடர் சிக்கல் நீடிக்கிறது.
சிறப்பு 'டெட்' தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்வது அந்தந்த மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், 'டெட்' தேர்வு விவகாரத்தில் சிறப்பு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து நிர்ணயம் செய்யும் தமிழக அரசின் கொள்கை முடிவு தான் சிறந்தது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கல்வி மானியக் கோரிக்கையில் ஏமாற்றம்:
இதற்கிடையே, சமீபத்திய கல்வி மானியக் கோரிக்கையில் ஆசிரியர் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குநர் பதவி கடந்த ஒரு மாதமாக காலியாக உள்ளதுடன், மாநிலம் முழுவதும் 32 கல்வி மாவட்ட அலுவலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையின் கீழ் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிலவும் சம்பள முரண்பாடு மற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் போன்ற மிக முக்கியப் பிரச்சனைகளுக்கான தீர்வு எட்டப்படாதது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment