பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நிதி முறைக்கேடு? - CPS கணக்குகளை தணிக்கை செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு!
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் தொகை எங்கே? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS), ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் விடுப்பு ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படாதது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து கழக ஊழியர்களின் CPS கணக்குகளை முழுமையாக தணிக்கை செய்து, ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி என்ன?
விழுப்புரத்தைச் சேர்ந்த ஆர்.சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
- கடந்த 2000-ஆம் ஆண்டு விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராகப் பணியில் சேர்ந்தேன்.
- கடந்த 2025-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு (Voluntary Retirement) பெற்றேன்.
- ஓய்வு பெற்று நீண்ட நாட்களாகியும் எனக்கு வர வேண்டிய பங்களிப்பு ஓய்வூதியத் தொகை (CPS), ஆண்டு ஊதிய உயர்வு (Annual Increment) மற்றும் விடுப்பு ஒப்படைப்புத் தொகை (Leave Surrender Amount) இதுவரை வழங்கப்படவில்லை.
- பலமுறை நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடடிவக்கையும் எடுக்கப்படவில்லை.
விருப்ப ஓய்வை ஏற்றுக்கொண்ட பிறகு, ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் நீண்ட காலம் காக்க வைப்பது சட்டவிரோதமானது என்றும், உடனடியாக அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியிருந்தார்.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அதிர்ச்சி வாதம்: நிதியில் முறைக்கேடா?
இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.சுரேஷ் ஆஜராகி காரசாரமான வாதங்களை முன்வைத்தார்.
"ஊழியர்களின் மாதச் சம்பளத்திலிருந்து பங்களிப்பு ஓய்வூதியத் தொகை (CPS) தவறாமல் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், போக்குவரத்து கழக நிர்வாகம் அந்தத் தொகையை ஊழியர்களின் CPS கணக்கில் சரியாகச் செலுத்துவதில்லை.
அதேவேளையில், ஆவணங்களில் மட்டும் தொகை செலுத்தப்பட்டது போல பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய நிதி முறைக்கேட்டிற்கு (Financial Irregularities) வழிவகுக்கும் செயல்!" என வழக்கறிஞர் சுரேஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்
மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, அரசுப் போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து பின்வரும் முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்தார்:
- CPS கணக்குகள் தணிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்து கழகங்களிலும், CPS திட்டத்தில் உள்ள ஊழியர்களின் கணக்குகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
- பணம் வரவு வைக்கப்பட்டதா?: ஊழியர்களின் பங்களிப்புத் தொகையும், அரசு/நிர்வாகத்தின் பங்களிப்புத் தொகையும் முறையாகச் செலுத்தப்பட்டு, ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறதா?: ஓய்வுபெற்ற தகுதியான ஊழியர்களுக்கு CPS தொகை முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
- ஆகஸ்ட் 27-க்குள் அறிக்கை: இக்கள நிலவரங்கள் குறித்து போக்குவரத்து துறைச் செயலாளர் மற்றும் விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
போக்குவரத்து கழக ஊழியர்களிடையே எதிர்பார்ப்பு
ஆயிரக்கணக்கான போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் உழைப்பிற்குரிய பணத்தைப் பெற முடியாமல் தவித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தணிக்கை உத்தரவு அவர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆகஸ்ட் 27-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள அரசு அறிக்கையில் என்னென்ன உண்மைகள் வெளிவரப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

No comments:
Post a Comment