Breaking

Tuesday, August 18, 2026

TAPS Pension Update 2026: 01.01.2026-க்கு பின் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் என்னவாகும்? தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


TAPS Pension Update 2026: 01.01.2026-க்கு பின் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் என்னவாகும்? தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) நடைமுறையில் உள்ளதா? ரூ.14,003 கோடி நிதி குறைக்கப்பட்டது ஏன்? TNGPGTA ஆசிரியர் சங்கம் எழுப்பிய 7 முக்கிய கேள்விகள் மற்றும் முழு விவரங்கள்

TAPS ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் (TNGPGTA) முக்கியக் கோரிக்கை!
தமிழ்நாட்டில் ஆசிரியர்களும் அரசுப் பணியாளர்களும் கடந்த 2004 முதல் 2025 வரை சுமார் 22 ஆண்டுகளாகப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) நடைமுறைப்படுத்த வலியுறுத்திப் போராடி வந்தனர்.
இந்த நீண்டகாலப் போராட்டங்களின் விளைவாக, 03.01.2026 அன்று தமிழ்நாடு அரசு "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" (TAPS) என்ற புதிய திட்டத்தை அறிவித்தது.

TAPS திட்டத்தின் முதன்மை அம்சங்கள் (GO No. 07)

அரசாணை எண்: 07, நாள்: 09.01.2026-ன்படி TAPS திட்டம் 01.01.2026 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பணியாளரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 10% பிடித்தம் செய்யப்படும்.
ஓய்வுக்குப் பிறகு கடைசி மாதம் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாகவும், அகவிலைப்படி உயர்வுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பட்ஜெட் ஒதுக்கீட்டில் மாற்றமும் எழுந்த ஐயங்களும்

மார்ச் 2026-ல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் TAPS திட்டத்திற்காக ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், ஆகஸ்ட் 2026-ல் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அந்த ஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மொத்த ஓய்வூதிய பலன்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.57,207.16 கோடியிலிருந்து ரூ.43,203.81 கோடியாகக் குறைக்கப்பட்டு, சுமார் ரூ.14,003.35 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு கூடுதலாகக் கடன் பெற அனுமதித்தால் மட்டுமே TAPS திட்டம் செயல்படுத்தப்படும் என நிதிமைச்சர் சட்டப்பேரவையில் கூறியிருப்பது ஆசிரியர் சங்கம் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு TNGPGTA எழுப்பும் 7 முக்கியக் கேள்விகள்:

  • 1. TAPS திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதா, இல்லையா?
  • 2. அரசாணை எண் : 07, நாள் 09.01.2026 நடைமுறையில் உள்ளதா, இல்லையா?
  • 3. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு என்னவாயிற்று?
  • 4. 01.01.2026-க்குப் பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கான 30% இடைக்கால நிவாரண அரசாணை (GO 111, நாள்: 26.06.2026) வெளியிட்ட பின், ஒன்றிய அரசிடம் கடன் கேட்பதை இதனோடு ஏன் தொடர்புபடுத்த வேண்டும்?
  • 5. பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத் தொகுப்பு விதிகள் குறித்த எதிர்பார்ப்பில் இருந்த ஊழியர்களுக்கு நிதி அமைச்சரின் சட்டமன்ற பதில் ஏமாற்றம் அளிப்பது ஏன்?
  • 6. மதிப்புரு ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப தலைமையிலான குழுவின் அறிக்கை ஏன் இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை?
  • 7. 01.01.2026-க்குப் பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு 50% ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்குவதற்கான தெளிவான காலக்கெடு என்ன?

ஓய்வூதியம் என்பது அரசின் கருணையல்ல; அது ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் உழைப்பால் பெற்ற முதுமைக்கால சமூகப் பாதுகாப்பாகும்.
எனவே, தற்போதைய சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு எந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, எப்போது பலன்கள் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என TNGPGTA மாநிலத் தலைவர் கி. மகேந்திரன், மாநிலப் பொதுச் செயலாளர் அ. சுந்தரமூர்த்தி மற்றும் மாநிலப் பொருளாளர் வி.எம். கண்ணன் ஆகியோர் பத்திரிக்கைச் செய்தி (18.08.2026) வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment