Breaking

Tuesday, July 21, 2026

TET பரிதாபங்கள் ; தேர்வு எழுதியோர் பாவம்தான்...!



TET_பரிதாபங்கள்

தேர்வு எழுதியோர் பாவம்தான்...!

ஜூலை 4&5ஆம் தேதிகளில் நடைபெற்ற சிறப்பு டெட் (Special TET) தேர்வில் , காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு எழுந்து வந்த 'கூற்று - காரணம்' வகை வினாக்கள், தேர்வர்களுக்கு கூற்றுவனாக(எமனாக) அமைந்ததைக் கேள்விப்பட்டிருப்போம்.

அதனை உறுதி செய்ய ஒரு சிறிய சான்று.

"கூற்று:

சரிவிகித உணவு, சரியான உடல் வளர்ச்சிக்கும் மற்றும் மனநலத்திற்கும் உதவுகிறது.

காரணம்:

சரிவிகித உணவு ,

சரியான உடல் வளர்ச்சிக்கும் மற்றும் மனநலத்திற்கும் உதவுகிறது." கூற்று, காரணம் இரண்டையும் வார்த்தெடுத்த அச்சு போல் ஒரே மாதிரி தந்துவிட்டு, நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்யவும் சொல்கிறார்கள்.

மூன்று மணி நேரத் தேர்வு காலத்தில், வாசித்து வாசித்துப் பார்த்துவிட்டு, சரி - ஆங்கிலத்தில் வாசித்துப் பார்ப்போம் என்று போனால், அங்கே மிகச் சரியாக Assertion and Reason கொடுத்திருக்கிறார்கள்.

ஆக, ஆங்கில வழியில் சரியான வினாவைக் கொடுத்துவிட்டு, தமிழ் வழியில் எழுதுபவர்களைக் காய வைக்கும்- அந்த அபூர்வமான மொழிபெயர்ப்பாளர்கள்/வினாத்தாள் அமைத்தவர்களை நாம் எதுவும் இங்கே கேட்க முடியாது.

ஏன் முடியாது என்கிறீர்களா? வினா விடையில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், ஆங்கில வழியைப் பார்த்துத்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று disclaimer போடுவார்களே!.

ஏனெனில் இது தமிழ்நாடு அல்லவா.!

வினாத்தாளை இறுதி செய்வதற்கு முன்பாக, இதுபோன்ற அடிப்படைப் பிழைகளைச் சரி செய்வதற்கு, வினாத்தாள் வடிவமைப்பாளர்களுக்கு நேரம் இல்லையா/போதுமான பணியாளர்கள் இல்லையா எனத் தெரியவில்லை.

இது போன்ற போட்டித்/தகுதித் தேர்வுகளை தமிழ் வழியில் எழுதுவதற்கு அசாத்திய மனவலிமையும் துணிச்சலும் வேண்டி இருக்கிறது. தேர்வுக்கு படிப்பதை விடவும் இதுவே முக்கியமானதாகத் தெரிகிறது.

வருங்காலங்களிலாவது இதுபோன்ற பிழைகளைத் தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் கவனமுடன் செயல்படக் கோருகிறோம்.

வளநாடு சே. சுப்ரமணியன்

No comments:

Post a Comment