ஆசிரியர் தகுதித் தேர்வு சர்ச்சை: சட்டசபையில் நிறைவேறிய தீர்மானத்தால் ஆசிரியர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா?
200000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் என்ன நன்மை நடக்கப் போகிறது?
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் நீண்டகாலப் போராட்டமாகவும், தவிப்பாகவும் இருப்பது ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் அது சார்ந்த சிக்கல்களாகும். 200000-க்கும் மேற்பட்ட மூத்த ஆசிரியர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இது தொடர்பான பல்வேறு கேள்விகள் கல்வி வட்டாரத்தில் எழுந்துள்ளன.
கருணை மதிப்பெண்ணும் எதிர்பார்ப்பும்
பணிக்காலத்திற்கு ஆண்டுக்கொரு மதிப்பெண் எனக் கருணை மதிப்பெண் வழங்கி சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. நீதிமன்ற விசாரணையின் போது, கருணை மதிப்பெண் கோருவதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், அரசு தரப்பு ஏன் இதைப் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அரசு தரப்பில் உரிய கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு கால அவகாசமும் கோரப்பட்டது, கோரியபடியே அவகாசமும் வழங்கப்பட்டது.
இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்டதால், நிச்சயமாக ஆசிரியர்களுக்குச் சாதகமான நல்ல செய்திதான் வரும் என்று இலட்சக் கணக்கான ஆசிரியர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், இறுதியில் கிடைத்தது என்னவோ ஏமாற்றமே! நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு தரப்பின் பதில் மனுவானது, "No grace mark! No relaxation in minimum cut off marks!" என்ற ரீதியில் அமைந்தது.
காரணங்களும் விவாதங்களும்
NCTE அறிவிக்கையிலும், RTE சட்டத்திலும் இதற்கு இடமில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடுமையாக இருப்பதாகவும் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால், ஆசிரியர்கள் தரப்பிலிருந்து சில நியாயமான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன:
- அரசாணை 181-ன் படி, ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது புதிய நியமனங்களுக்கு மட்டுமே என்றும், ஏற்கனவே பணியாற்றிக் கொண்டு இருப்போருக்குத் தேவையில்லை என்றும் அரசுதானே கூறியது?
- 2010 முதல் 2022 வரை தகுதித் தேர்வைக் கணக்கில் கொள்ளாமல் பதவி உயர்வு வழங்கியது யார்?
- 20 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றிய பின், திடீரென தகுதியற்ற ஆசிரியர்களாக முத்திரை குத்தப்படுவது எந்த வகையில் நியாயம்?
- 20 வயதில் சாதிக்க வேண்டியதை 60 வயதிலும் சாதிக்க வேண்டும் எனக் கட்டளையிடுவது தர்மமா? 2010-ல் இருந்த திறமைகள் 2026-ல் அப்படியே இருக்க முடியுமா?
சட்டசபை தீர்மானமும் நிதர்சனமும்
நீதிமன்றத்தில் கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மறுபுறம் தேர்வு தேவையில்லை என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானத்தைப் பார்த்தவுடன் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மாற்றிவிடுமா அல்லது மத்திய அரசு பாராளுமன்றத்தில் உடனடியாக சட்டத்திருத்தம் செய்துவிடுமா என்ற கேள்விகள் எழுகின்றன. டெட் தேர்வு சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட தனி மசோதாவும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மூத்த ஆசிரியர்களின் இதயத்தில் ஈட்டியைச் சொருகுவது போன்ற இந்தச் சூழலில், பழமொழிதான் நினைவுக்கு வருகிறது: "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்".
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்; காலம்தான் இதற்குத் தகுந்த பதில் சொல்லும்!

No comments:
Post a Comment