Breaking

Monday, August 10, 2026

பாடக் கற்பித்தலா? கணக்கெடுப்பா? - ஆகஸ்ட் மாதப் பணி நெருக்கடியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!


பாடக் கற்பித்தலா? கணக்கெடுப்பா? - ஆகஸ்ட் மாதப் பணி நெருக்கடியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

ஆசிரியர் கட்டுரை: சு.மூர்த்தி


நடப்புக் கல்வி ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வழக்கத்திற்கு மாறாகப் பலதரப்பட்ட பணி நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பள்ளித் தொடக்க மாதங்களான ஜூன் மற்றும் ஜூலையில் புதிய மாணவர் சேர்க்கை, இடைநின்ற மாணவர்களை மீட்டெடுத்தல், சீருடை மற்றும் பாடநூல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கல், மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்குதல் மற்றும் பதிவேடுகளைப் புதுப்பித்தல் போன்ற நிர்வாகப் பணிகளிலேயே பெரும்பகுதி நேரம் செலவாகிறது.
ஆகஸ்ட் மாதத்திலாவது முழு நேரக் கற்பித்தலில் ஈடுபடலாம் என ஆசிரியர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது வரலாறு காணாத கூடுதல் பணிச்சுமை அவர்களை அழுத்தி வருகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர்கள் சந்திக்கும் 11 முக்கியப் பணி நெருக்கடிகள்:

பள்ளிகளில் வழக்கமான பாடக் கற்பித்தலைத் தாண்டி, ஒரே நேரத்தில் பல்வேறு துறை சார்ந்த பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது:

  • 1. கலைத் திருவிழா போட்டிகள்: பள்ளி அளவிலான கலை மற்றும் பண்பாட்டுப் போட்டிகளைத் திட்டமிட்டு நடத்துதல்.
  • 2. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுக்கும் பணி.
  • 3. தற்காப்புக் கலை பயிற்சி: பள்ளி மாணவிகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சிகளைத் தொடங்குதல்.
  • 4. புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: எழுத்தறிவு மையங்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
  • 5. பல்வேறு மன்றச் செயல்பாடுகள்: இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், மகிழ் முற்றம், சிறார் திரைப்படம் மன்றம், சிறார் இதழ் வாசிப்பு மன்றம் போன்ற தொடர் செயல்பாடுகள்.
  • 6. பள்ளி மேலாண்மைக் குழு (SMC): தவறாமல் கூட்டங்களை நடத்திப் பதிவேடுகளைப் பராமரித்தல்.
  • 7. கணினி ஆய்வுக்கூடச் செயல்பாடுகள்: Mindspark மற்றும் TN Spark போன்ற டிஜிட்டல் கற்றல் திட்டங்களைச் செயல்படுத்துதல்.
  • 8. விழிப்புணர்வு முகாம்கள்: போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள்.
  • 9. இதரத் துறை சார்ந்த போட்டிகள்: தமிழ் வளர்ச்சித் துறை, சூழலியல் துறை போன்ற வெளித்துறைகள் மூலம் நடத்தப்படும் மாணவர் செயல்பாடுகள்.
  • 10. ஆசிரியர் பயிற்சிகள்: நேரடி மற்றும் இணைய வழியில் (Online/Offline) நடைபெறும் தொடர் பயிற்சிகளில் பங்கேற்பது.
  • 11. வழக்கமான கற்பித்தல்: பாடத்திட்டம் சார்ந்த வகுப்பறைச் செயல்பாடுகள்.

கற்பித்தல் பின்னடைவும் மாணவர்களின் கற்றல் இழப்பும்:

பள்ளிகளில் முதன்மையாக நடைபெற வேண்டிய "பாடத்திட்டம் சார்ந்த கற்றல்-கற்பித்தல்" செயல்பாடு, இந்த எண்ணற்ற கூடுதல் பணிகளால் ஓரங்கட்டப்பட்டு 'பத்தோடு பதினொன்றாக' மாறிவிட்டது.

இவற்றுடன் சேர்த்து, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமமான கற்றல் வாய்ப்புகள், மாணவர் நடத்தைச் சிக்கல்களைச் சீரமைத்தல், காலை/மதிய உணவு மற்றும் குடிநீர்/கழிப்பறைப் பராமரிப்பைக் கண்காணித்தல் போன்ற அத்தியாவசியப் பொறுப்புகளும் ஆசிரியர்களையே சார்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாகப் பாட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் நியமனங்கள் முறையாக நடைபெறாத சூழலில், சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழாக்கள் கூட முறைப்படியான கவனத்தைப் பெற முடியாத அளவுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவது மட்டுமின்றி, மாணவர்களுக்குக் பெரும் கற்றல் இழப்பு (Learning Loss) ஏற்பட்டு, ஆசிரியர்-மாணவர் இடையேயான கல்விச் சார்ந்த பிணைப்பும் அந்நியப்பட்டு வருகிறது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றுத் தங்கள் பணியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கூடுதல் அழுத்தமும் ஆசிரியர்களுக்கு உள்ளது.

கல்வி நிர்வாகம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்:

இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில் கல்வித்துறை உடனடியாகச் சில முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்:

  1. கற்பித்தலுக்கு முன்னுரிமை: பாடத்திட்டம் சார்ந்த செயல்பாடுகளுக்குப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முழுமையான போதுமான நேரத்தை ஒதுக்க வழிவகை செய்ய வேண்டும்.
  2. பிற துறைப் பணிகளுக்குக் கட்டுப்பாடு: பிற அரசுத் துறைகள் வழங்கிடும் கூடுதல் பணிகள் கல்வித்துறை மூலம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
  3. செயல்பாடுகளை நெறிப்படுத்துதல்: பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளை ஆய்வு செய்து, பள்ளி செயல்படும் நேரம் மற்றும் வேலை நாட்களுக்கு உட்பட்ட அளவிற்குள் அமையுமாறு நெறிப்படுத்த வேண்டும்.
  4. சுய செலவுகளைத் தவிர்த்தல்: போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிடும் தவறான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
  5. வெளியேறுவதைத் தடுத்தல்: பாடத்திட்டம் சாராத பணிகளுக்காக ஆசிரியர்களை அடிக்கடி பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

உடனடியாக மேற்கொள்ள வேண்டிய 2 அவசரத் தீர்வுகள்:

1. பள்ளி நேரத்தை மாற்றி அமைத்தல்:
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் வீட்டுப் பட்டியல் பணியில் தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைவரும் ஈடுபட்டுள்ளதால், வழக்கமான பள்ளி நேரத்தோடு இப்பணியைச் செய்ய முடியாது. எனவே, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பள்ளிகளின் வேலை நேரத்தைப் பிற்பகல் 2:00 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும்.

2. கலைத் திருவிழாவை ஒத்திவைத்தல்:
இம்மாதத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள பள்ளக் குழந்தைகளுக்கான கலைத் திருவிழா போட்டிகளையும் இதர மன்றச் செயல்பாடுகளையும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்.


கட்டுரையாளர்: சு.மூர்த்தி, கல்விச் சிந்தனையாளர் / ஆசிரியர்.

No comments:

Post a Comment