Breaking

Friday, August 28, 2026

இணையவழி கூட்டங்களால் மன உளைச்சல்: நகராட்சி கமிஷனருக்கு ஆசிரியர்கள் கண்டனம்!



இணையவழி கூட்டங்களால் மன உளைச்சல்: கோவில்பட்டி நகராட்சி கமிஷனருக்கு ஆசிரியர்கள் கண்டனம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை இணையவழி கூட்டங்கள் மூலம் மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கோவில்பட்டி நகராட்சி கமிஷனருக்கு ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இணையவழியில் கூட்டம் நடத்துவதால் மன உளைச்சல்: கோவில்பட்டி நகராட்சி கமிஷனருக்கு ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்!



கோவில்பட்டி: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை, அடிக்கடி இணையவழி கூட்டங்களை நடத்தி "மெமோ கொடுப்பேன்" என மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கோவில்பட்டி நகராட்சி பொறுப்பு கமிஷனரின் செயலுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நெருக்கடியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி



இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதற்கட்டமாக, வீடு பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தீவிரமாக நடந்து வருகிறது. கோவில்பட்டி நகராட்சி பகுதிகளிலும் இந்த பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகலில் கடுமையான வெயில், இரவு நேரங்களில் அச்சுறுத்தும் நாய்க்கடி பிரச்சனை, உடல் உபாதைகள் மற்றும் நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இடையேயும், ஆசிரியர்கள் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.



மிரட்டல் விடுத்த கமிஷனர் - கொதித்தெழுந்த ஆசிரியர்கள்



கணக்கெடுப்பு மற்றும் வரைபடம் தயாரித்தல் போன்ற பணிகளை ஆசிரியர்கள் துரிதமாகச் செய்து வரும் வேளையில், கோவில்பட்டி நகராட்சி பொறுப்பு கமிஷனர் அடிக்கடி இணையவழியாகக் கூட்டங்களை நடத்தி வருகிறார். பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும், தவறினால் மெமோ கொடுத்து விடுவேன் என்று மிரட்டியும் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



குறிப்பாக, உரிய காலக்கெடுவுக்கு முன்பாகவே பணியை முடித்து, தற்போது வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை, கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி அரசு விடுமுறை தினத்தன்று கூட இணையவழி கூட்டத்தின் வாயிலாக அழைத்து நெருக்கடி தந்துள்ளார். ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்ட காலி வீடுகளை மீண்டும் கணக்கெடுக்க வேண்டும் என அவர் வற்புறுத்தியுள்ளார். இதனால் பெண் ஆசிரியர்கள் உட்பட அனைத்து கணக்கெடுப்பாளர்களும் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை மற்றும் கமிஷனர் மாற்றம்



ஆசிரியர்களைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வரும் கோவில்பட்டி நகராட்சி பொறுப்பு கமிஷனரின் இந்த விரோத நடவடிக்கையைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டக் கிளை வன்மையாகக் கண்டித்துள்ளது. மீண்டும் மீண்டும் காலி வீடுகளைக் கணக்கெடுக்கக் கூறி நெருக்கடி கொடுப்பதை நகராட்சி கமிஷனர் திரும்பப் பெறாவிட்டால், ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜனநாயகப்பூர்வமான இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, நகராட்சி நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அதிரடி செயல்முறை ஆணையில், தூத்துக்குடி மாநகராட்சி உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவுக்கு கோவில்பட்டி நகராட்சி கமிஷனராக வழங்கப்பட்டிருந்த கூடுதல் பொறுப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நிர்வாக நலன் கருதி, திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனர் வீரமுத்துகுமார், மறு உத்தரவு வரும் வரை கோவில்பட்டி நகராட்சி கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment