Breaking

Tuesday, August 25, 2026

விடுமுறை நாட்களில் SMC மறு கட்டமைப்பு நிகழ்வுகள்: ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!



விடுமுறை நாட்களில் SMC மறு கட்டமைப்பு நிகழ்வுகள்: ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!

சென்னை: பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறு கட்டமைப்பு நிகழ்வுகளைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணைப்படி விடுமுறை நாட்களான சனிக்கிழமைகளில் நடத்தாமல், பள்ளி வேலை நாட்களில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் (பொ) ரெ.ஈவேரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக்கான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் நடத்துவது தொடர்பான அறிவிப்புகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதன்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் மறு கட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வரும் 29.8.2026 தேதியிலும், தொடக்கப் பள்ளிகளில் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் 12.9.2026 மற்றும் 19.9.2026 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

மேலும், நடுநிலைப் பள்ளிகளில் 26.9.2026 தேதியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 10.10.2026 தேதியிலும் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் 19.9.2026 தவிர மற்ற அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள வேலை திட்ட அட்டவணையில் விடுமுறை நாளாக குறிப்பிடப்பட்டுள்ள சனிக்கிழமைகளில் நடைபெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் சிக்கல்கள்:

ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி வேலை நாள் அட்டவணை வெளியிடப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிடுகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை நாட்களில் வங்கி, மின்துறை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடுகின்றனர். மேலும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வெளியூர் பயணங்களையும் திட்டமிட்டு அதற்கான தொடர்வண்டி, பேருந்து மற்றும் தங்கும் விடுதி முன்பதிவுகளையும் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தொடர்பான நிகழ்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயம் இரண்டு சனிக்கிழமைகளில் ஆசிரியர்கள் இப்பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிட்ட சொந்த பணிகளில் ஈடுபட முடியாத சிரமம் ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை:

எனவே, பள்ளிக் கல்வித்துறையின் வேலை திட்ட அறிவிப்பின்படி வழங்கப்பட்ட விடுமுறை நாட்களைத் தவிர்த்து, பள்ளி வேலை நாட்களில் இது போன்ற நிகழ்வுகளை வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகளை பள்ளி வேலை நாட்களில் மேற்கொள்ளும் வகையில் உரிய தேதி மாற்றம் செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.

- ரெ.ஈவேரா,
பொதுச்செயலாளர் (பொ),
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

No comments:

Post a Comment