*நாங்களும்_ஆசிரியர்கள்_தான்*
*என்று மாறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நிலை..*
மக்கள் தொகை கணக்கெடுப்பா, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை கூப்பிடு.
பொருளாதார புள்ளிவிவர கணக்கெடுப்பா தொடக்கப்பள்ளி வாத்தியார கூப்பிடு.
தேர்தல் பணியா கூப்பிடு..
வயதுவந்தோர் கல்வியா, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை கூப்பிடு..
உள்ளாட்சி உள்ளூர் மக்கள் தொகை கணக்கெடுப்பா, தொடக்கப்பள்ளி வாத்தியார்கிட்ட கேளு..
எமிஸ் பணி, பள்ளி புள்ளிவிவர கணக்கு, UDISE பணியா தொடக்கப்பள்ளிக்கு அந்த ஆசிரியர்களையே செய்யச்சொல்லு..
BLO எனப்படும் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் பணியா, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை செய்யச்சொல்லு..
SIR பணியா, தொடக்கப்பள்ளி வாத்தியார கூப்பிடு...
தமிழ்வழி ஆங்கிலவழி பிரிவா, இரண்டையும் ஒரே ஆசிரியரையே பார்க்கச்சொல்லு...
இப்படி அரசின் எந்த ஒரு முக்கிய பணியாக இருந்தாலும் பணியமர்த்தப்படுவது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தான்.
கேட்டால் மற்றவர்களை செய்யச்சொன்னால் வகுப்பு பாதிக்கும், அலுவலகம் பாதிக்கும். இவர்களை அழைத்தால் பெருசா ஒரு பாதிப்பும் இல்லனு சொல்வீங்க.
இல்ல தெரியாமல் தான் கேட்கிறோம், ஒரு குழந்தையின் கற்றல் எங்கே தொடங்குகின்றது. தொடக்கப்பள்ளியிலா அல்லது கணக்கெடுக்கும் இடங்களிலா.. ஏற்கனவே பல இடங்களில் மாணவர் சேர்க்கை இல்லாமல் பல பள்ளிகள் மூடப்படும் சூழலில் சென்றுகொண்டு இருக்கின்றது. பல ஈராசிரியர் பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்கள் தான் பயில்கின்றனர்.
எங்கள் பள்ளியில் 400-குழந்தைகள் படிக்கின்றனர். எங்கள் கிராமம் மட்டும் அல்லாது சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளனர். தற்போது தொடர்ச்சியாக ஒருமாத காலம் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு 5-ஆசிரியர் செல்லும் சூழல், ஏற்கனவே தலைமை ஆசிரியர் பணியிடம் காலிப்பணியிடம். இப்படியான சூழலில் அந்த குழந்தைகளின் பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கும். இதுபோன்றுதான் பல பள்ளிகளின் நிலை.
இதற்கெல்லாம் காரணம் மேற்சொன்ன அனைத்தும் தான். ஆனால் காரணம் அனைத்தும் ஆசிரியர்கள் மேல் மட்டும் சுமத்தப்படும் சூழல் தான் உள்ளது.
தொடக்க நிலையில் ஒரு குழந்தையின் கற்றல் பின்னடைவை சந்தித்தால் அது அக்குழந்தையின் இறுதி வரை தொடரும் என்பதை எப்போதுதான் உணர்வீர்கள்.
வருடம் முழுவதும் இப்படியான பணிகளையே தொடர்ச்சியாக கொடுத்தால் அந்த ஆசிரியர்களால் தொடர்ச்சியான கற்பித்தலை எப்படி அந்த குழந்தைக்கு கொடுக்க முடியும்.
கற்பித்தல் என்பது கணினியில் ப்ரோகிராம் செயல்படுத்துவது போன்றதா என்ன? இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து வந்தாலே முன் கற்றலை நினைவூட்டல் என்பதே குழந்தைகளிடம் எவ்வளவு சிரமம் என்பது தெரியுமா? ஒவ்வொரு குழந்தையின் மனநிலையை அறிந்து, அக்குழந்தையின் குடும்ப சூழலை உணர்ந்து, அதன் பிறகு அக்குழந்தைக்கு ஏற்ற கற்றலை தொடர்ந்து கொடுத்தால் தான் ஒரு ஆசிரியரால் தன் வகுப்பின் கற்பித்தலில் குறைந்தது 60% அடைய முடியும்.
இதில் அந்த ஆசிரியர் தொடர்ந்து விடுமுறை எடுத்தாலோ அல்லது அந்த ஆசிரியரை தொடர்ந்து கற்பித்தல் சாராத பணிகளுக்கு அனுப்பினாலோ நிச்சயம் பாதிக்கப்படுவது அரசுப்பள்ளிகளை நம்பி வரும் குழந்தைகள் தான்.
இந்த நிலையே தொடர்ந்து நீடித்தால் மக்களிடம் ஆசிரியர்களை பற்றியும் அரசுப்பள்ளிகளை பற்றியும் நம்பிக்கை இன்னும் குறைந்து கொண்டே செல்லும், அதன் விளைவுதான் பல இடங்களில் மாணவர் சேர்க்கை குறைவிற்கான காரணம்.
ஒரு கல்வி ஆண்டாவது 220-வேலை நாட்களை முழுவதுமாக அந்த குழந்தைகளுக்காக என்று செய்ய முடிகிறதா என்றால் நிச்சயம் இல்லை தான்.
எண்ணிக்கையில் அதிக அளவு உள்ள இனம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தான். ஒவ்வொரு முறையும் நமக்கான உரிமைக்கு போராடுவதை போன்று,
என்று குழந்தைகளின் கற்றலுக்காக போராடுகின்றோமோ அதுவரை இப்படித்தான் நடந்துகொண்டு இருக்கும்.
அதுவரை கற்பித்தல் சாராத பணியா கூப்பிடுங்க தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை என்ற நிலைதான் நீடிக்கும்.
நாங்களும் ஆசிரியர்கள் தான் ஐயா..
எங்களிடம் படிப்பதும் குழந்தைகள் தான்...!

No comments:
Post a Comment